தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதுபெரும் தூணான மாமனிதர் மருத்துவர் ஜெயகுலராஜாவின் (Dr.T.W.Jeyakularajah) மறைவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அஞ்சலியை தெரிவித்துள்ளனர்.
“இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக தேச விடுதலையை வரித்துக் கொண்டு, அந்த இலட்சியத்திற்காக அயராது உழைத்த உன்னத மனிதரை தமிழீழ தேசம் 16.06.2024 அன்று இழந்துவிட்டது.
தாயகத்தின் விடுதலைக்காக ஒளிர்ந்த சுதந்திர சுடர் ஒன்று நிரந்தரமாகவே அணைந்துவிட்டது. தமிழர் தேசியத்தின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப் பாட்டுக்காகவும் சுகாதார நலன்களுக்காகவும் ஓயாது உழைத்த ஒரு உன்னத மனிதரை இழந்து தமிழர் தேசம் ஆறாத்துயரில் மூழ்கிக்கிடக்கிறது.
வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா அவர்களின் இனப் பற்றுக்கும், விடுதலை பற்றுக்கும் மதிப்பளித்து அவரது விடுதலைப் பணியை மதிக்கும் வகையில் “மாமனிதர்” என்ற அதி உயர் தேசிய விருதை அவருக்கு வழங்கி மதிப்பளிக்கின்றோம்.
“சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்” எனும் தேசியத்தலைவரின் கூற்றுக்கு அமைய மாமனிதர் கலாநிதி ஜெயகுலராஜா அவர்கள் என்றென்றும் எம்மத்தியில் வாழ்வார்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.