நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள்,
ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று(25.05.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாடுகள்
மேலும் அந்த அறிக்கையில், சம்பள உயர்ச்சிக்காக ஒருநாள் விடுமுறையை
அறிவிப்போம். அதிபர்கள் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக 1998
ஆம் ஆண்டுமுதல் மாறி மாறி வருகின்ற ஆட்சியாளர்களிடம் சம்பள முரண்பாடுகளைத்
தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கையளித்தோம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்
தீர்ப்பதாக வாக்குறுதியளித்து பின்னர் ஏமாற்றப்பட்டோம்.
இது காலம் காலமாகத் தொடர்கின்றது. இன்றைய கால கட்டத்தில் வாழ்வதற்குப் போதுமான
வருமானமின்றி நாம் ஒவ்வொருவரும் கடனாளிகளாக மாறியுள்ளோம்.
இந்நிலையில் தருவதாக உறுதியளித்த வேதனத்தையாவது தருமாறு இந்த அரசிடம்
கேட்கிறோம்.
நீண்டகாலமாக மாணவர்களின் நலன்களிலும், அவர்களின் கல்வியிலும் எத்தகைய
பாதிப்புகளும் ஏற்படாதவகையில் எமது அதிபர்கள், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன்
செய்துவரும் சேவைக்கு மதிப்பளித்து, சம்பள அதிகரிப்பை வழங்குமாறு நாளை (26) நடைபெறும் ஒருநாள் பணிப்பகிஸ்கரிப்பில் அனைவரும்
கலந்துகொள்வோம்.
இது ஒவ்வொரு அதிபர், ஆசிரியரினதும் தனிப்பட்ட நியாயமான
கோரிக்கை. இதனை நாம் அனைவரும் ஒருமித்து, ஒன்றுபட்டு அரசிற்கு எடுத்துரைப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.