மலையகப்பகுதியிலிருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ள அனைத்து
மாணவர்களுக்கும் மடிக்கனணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்தானிகர் சந்தோஷ் ஜா (Shri Santosh Jha) உடன் நேற்று (26) மலையக கல்வி வளர்ச்சி தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதை தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மலையகப்பகுதியில் வாழும்
பெரும்பாலான மாணவர்கள் இன்று பொருளாதார நெருக்கடியில் வாழ்வதனால் பல்வேறு
பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பலர் பொருளாதார நெருக்கடி
காரணமாகவும் தங்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக பல்கலைக்கழக கல்வியினை இடை நடுவில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று
விடுகின்றனர்.
இது மலையகத்தை பொருத்த வரையில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
மலையகம் மாற்றம் பெற வேண்டும் என்றால் அது கல்வியில் தான் உள்ளது என்பது
எவரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
இந்நிலையில் மலையக மாணவர்களின் கல்வியினை
தொடர்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மலையக அரசியல் தலைவர்கள்
பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
மலையக மாணவர்களுக்கு மடிக்கணினி என்பது
இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது அதனை பெற்றுக்கொள்வதற்கு பெரும்பாலான
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வசதியில்லாமையினால் நாங்கள் இன்று இந்திய
உயர்தானிகரிடம் ஒரு கோரிக்கைகை முன்வைத்தோம்.
மலையகத்திலிருந்து தெரிவான
அனைத்து மாணவர்களுக்கும் தங்களுமடய கற்றலை மேம்படுத்துவதற்கு ஒரு
மடிக்கனணியினை பெற்றுத்தர வேண்டும்.
அதிலும் குறிப்பாக பெருந்தோட்ட மாணவர்களுக்கு
மட்டுமன்றி ஏனைய மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
இன்று
பெரும்பாலானவர்கள் தோட்ட புறத்தில் இருந்தாலும் பலர் தோட்டத்தில் வேலை
செய்வதில்லை. அது மாத்திரமன்றி பலர் தோட்டத்தை விட்டு வெளியில் வந்து வேறு வேறு
தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே அவர்களும் பொருளாதார ரீதியில்
பாதிப்புக்குள்ளாகியிருப்பதனால் அவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைத்தோம் அதனையும் அவர் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக
தெரிவித்தார்.
இந்திய புலமைப்பரிசில்
இதே நேரம் அது மாத்திரமின்றி இந்திய புலமைப்பரிசில் வழங்கும் போது தோட்ட
மாணவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது ஆனால் தோட்ட
நிர்வாகத்திடம் கடிதங்கள் பெற்றுக்கொள்ள செல்லும் போது அவர்கள் தோட்டத்தில்
வேலை செய்பவர்களுக்கு மாத்திரம் தான் வழங்குகின்றனர்.
ஆனால் இன்று தோட்டத்தில்
வேலை செய்யாத பலருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை ஆகவே அவர்களுக்கும்
வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தோம் அதனையும் அவர்
ஏற்றுக்கொண்டார்.
அதே நேரம் இன்று கிளங்கன் வைத்தியசாலை தவிர பல வைத்தியசாலைகள்
மலையக பகுதியில் காணப்படுகின்றன எமது மக்கள் இன்றுள்ள காலநிலையில் அங்கு
செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர் எனவே தோட்ட வைத்தியசாலைகளையும்
அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை
முன்வைத்தோம்.
ஆகவே மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த கல்விக்கான
செயல்பாட்டினை முன்னெடுப்பதற்கு முட்டுகட்டையிடாது அதனை நிவர்த்தி செய்து
கொள்வதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் நான்
அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.