உக்ரைனுக்கு (UKraine) எதிரான யுத்தத்தில் ரஷ்யாவுக்காக (Russia) போரிட்டு உயிரிழந்த சிறிலங்காவின் ஓய்வுபெற்ற இராணு அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரஷ்யா நஷ்டஈடு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா (Sri Lanka) வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழு அண்மையில் ரஷ்யாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போதே, அந்த நாட்டு அதிகாரிகளிடம் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
17 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவுக்கு அண்மையில் பயணம் செய்திருந்த சிறிலங்கா வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழு, அந்த நாட்டு இராணுவத்தில் இணைந்துள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில் முக்கிய பேச்சுக்களை முன்னெடுத்துள்ளது.
இதன் போது, சிறிலங்கா வின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் 17 பேர் ரஷ்யாவுக்காக போரிட்டு இதுவரை உயிரிழந்துள்ளதாக தாரக பாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சனைகளுக்கு தீர்வு
அத்துடன், போரில் பலர் காயமடைந்துள்ளதாகவும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரஷ்யாவில் உள்ள சிறிலங்காவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக இரண்டு நாடுகளினதும் முக்கிய அதிகாரிகளை உள்ளடக்கிய கூட்டு செயற்குழுவொன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் இதற்கு இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தாரக பாலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.