மக்களிடமிருந்து தலைவர்கள் பிறக்கிறார்கள் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று (01) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை முன்வைப்பீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வேட்பாளரை தெரிவு செய்யவில்லை
அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுஜன பெரமுன இன்னும் வேட்பாளரை தெரிவு செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற ‘சமாதான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகள் பிரகடனத்தின் 70வது ஆண்டு விழாவில்’ பங்கேற்றுவிட்டு, இலங்கை திரும்பும் போது, மகிந்த ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 28ம் திகதி சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை வெற்றி
மேலும் பேசிய மகிந்த ராஜபக்ச, சீன அதிபர் ஜின்பிங் மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் வான் யீ ஆகியோருடன் தாம் கலந்துரையாடியதாகவும், பேச்சுவார்த்தை வெற்றியளித்ததாகவும், சீன அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை தொடர்பில் நல்ல நிலைப்பாட்டுடன் இருக்கும் எனவும் தெரிவித்தார்.