அண்மைக்காலமாக உடம்பை வெண்மையாக்க பலரும் பல்வேறு கிறீம்களை பயன்படுத்துகின்றனர்.
மருத்துவர்களின் எவ்வித பரிந்துரையும் இன்றி விளம்பரங்களை பார்த்து வியாபார நிலையங்களில் இவற்றை வாங்கி தமது இஷ்டப்படி பயன்படுத்தி வருகின்றனர்.
கிறீம்களால் சிறுநீரகநோய்
இவ்வாறு கிறீம்களை பயன்படுத்துவதால் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (03) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் டொக்டர் இந்திரா கஹ்விட்ட இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“24 மணி நேரத்தில், நான் சமார் 60 நோயாளிகளை பரிசோதித்தேன். அதில் 10%, வெண்மையாக்கும் கிறீமினால் ஏற்படும் பிரச்சனைகளுடன் வந்தனர். இவை நீண்ட காலமல்ல, குறுகிய கால பிரச்சினை. இப்போது நான் சில விஷயங்களைப் பார்க்கிறேன்.
வெள்ளையாக்கும் கிறீம்கள்
உதாரணத்திற்கு, உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால் கருப்பு நிறமாக மாறுகிறது. அனைத்திற்கும் பொதுவான காரணி வெள்ளையாக்கும் கிறீம்கள். மேலும், நகங்கள் பழுப்பு நிறமாக, ஒரேஞ்ச் நிறமாக மாறும். இவை முன்பை விட அதிகமாக காணப்படுகின்றன.
குறுகிய கால பக்க விளைவுகள் அதிகரித்து வருகின்றன. புற்றுநோய்க்கு முன் சிறுநீரகங்கள் மோசமடைந்து உயிர் சேதமும் ஏற்படுகிறது”. என தெரிவித்தார்.