அரசாங்கம் தமது தொழில் உரிமையினை பாதுகாக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு
மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.`
குறித்த போராட்டமானது மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது நாளாகவும் இன்றைய தினம் (4) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது,வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான கோசங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தொடரும்
இந்தநிலையில், அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தினை அழிக்காதே,பாரபட்சம்
காட்டாதே,யாருக்கும் பயனற்ற பல்கலைக்கழக பட்டம் எதற்கு,பல்கலைக்கழகத்திற்கு
தெரிவு செய்து எம்மை ஏமாற்றாதீர்கள்,சிறப்பாக வாழ பட்டம் பெற்றோம் சீரழிகிறது
வாழ்க்கை,பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்தது வீதியில் நிற்கவா போன்ற
வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமக்கான தொழிலை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் வரையில் தமது போராட்டம்
தொடரும் என இங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏனைய மாவட்டங்களில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் நிலையில்
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படும் நிலைமை
காணப்படுவதாக இங்கு கவலை வெளியிடப்பட்டுள்ளது.