Courtesy: Sivaa Mayuri
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கடற்றொழில் சமூகங்களுக்கு முன் தயாரிக்கப்பட்ட வீட்டுத் திட்டம், கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் அரிசி பொதிகள் உட்பட 1.5 பில்லியன் ருபாய் மதிப்பிலான மனிதாபிமான உதவியை சீனா வழங்குகிறது
500 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மூன்று உதவிப் பொதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு மாகாணங்களுக்கும் சீனாவால் வழங்கப்படும் மிகப்பெரிய உதவித்தொகையாக இது அமைந்துள்ளது.
நெருங்கிய உறவு
வடக்கு கிழக்கில் இந்தியாவும் அபிவிருத்தி, வாழ்வாதாரம் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் அதிக முதலீடு செய்து வரும் நிலையிலேயே சீனாவின் உதவியும் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில், சீனாவின் இந்த தாராளமான மானியம் இரு நாடுகளும் பல ஆண்டுகளாகப் பேணி வரும் நெருங்கிய உறவுகளுக்குச் சான்றாகும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கையை விளையாட்டுக் களமாகப் பயன்படுத்தி, பிராந்தியத்தில், ஒரு நாட்டின் நலன்களுக்கு எதிராக மற்றுமொரு நாடு, செயல்படக்கூடாது என்ற அரசாங்கத்தின் இராஜதந்திரக் கொள்கையை வலியுறுத்தும் அதே வேளையில், இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ள எவரிடமிருந்தும் உதவிகளைப் பெறுவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்ட நிகழ்வு
முன்னதாக, யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற, அரிசிப் பொதிகளை வழங்கும் முதற்கட்ட நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்தநிலையில், முன் கட்டப்பட்ட வீடுகள், இந்த வாரத்தில் கொள்கலன்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, இரண்டு மாகாணங்களில் உள்ள கடற்றொழில் சமூகத்தினருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் தலா 64 அலகுகள் என 116 அலகுகள் இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்தியாவின் ஹைதராபாத் விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.