இலங்கையின் (Sri lanka) சனத்தொகையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நாட்டில் உள்ள 16.1% வீதமான மக்களுக்கான குடிநீரின் பிரதான ஆதாரம் பாதுகாப்பற்ற கிணறுதான் என்பதும் தெரியவந்துள்ளது.
குடிநீர் சேவை
இலங்கை மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொடர்பாக குறித்த திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, உள்நாட்டு சனத்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வளாகங்களில் பாதுகாப்பான குடிநீர் சேவையைப் பெற முடியும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நகர்ப்புற மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களும், கிராமப்புற மக்களில் நான்கில் ஒரு பகுதியினரும் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதாகவும், தோட்டப்புற மக்களில் 3.1% மட்டுமே பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்நாட்டு மக்களில் 70% க்கும் அதிகமானோர் தங்கள் வளாகங்களில் மேம்படுத்தப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தி குடிநீரைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடிப்படை சுகாதார சேவை
இதேவேளை, இலங்கையின் சனத்தொகையில் 6.3% அடிப்படை சுகாதார சேவைகளைப் பயன்படுத்துவதில்லை என்றும் 0.1% வீதமான மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் 84.9 வீதமான குடும்ப மக்கள் மூடிய கழிவறைகளைப் பயன்படுத்துவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.