நாட்டில் முறைகேடு மற்றும் ஊழலை தடுக்கும் நோக்கில், சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) மீண்டும் இலங்கைக்கு (Sri Lanka) கொண்டு வருவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடவில் நேற்று (18) நடைபெற்ற பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தை ஏற்குமெனவும் மேலும், அரசாங்கம் முறைகேடு மற்றும் ஊழலை முற்றாக தடுக்கும் என தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள தொகைகள்
இந்தநிலையில், 1100 பில்லியன் ரூபாய் வரிப்பணம் திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ளதாகவும், இதனை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீட்டெடுக்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இதன் ஆரம்பக்கட்டமாக, 169 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தினை இலகுவாக மீட்டெடுக்க முடியும் எனவும் மீதமுள்ள தொகைகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
குறிப்பாக, ”சிலர் வரி செலுத்துவதற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள், நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பிறகு அவர்கள் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே தொகையை வரியாக செலுத்துகிறார்கள். நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு, வரித் தொகையை வட்டியுடன் வசூலிக்க சட்டங்களை திருத்துவோம்.
மேலும், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் குறைந்தபட்சமாக 10,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.