வவுனியா (Vavuniya) வைத்தியசாலையில் மரணித்த சிசுவின் தந்தையை அழைத்து வைத்தியசாலை நிர்வாகம், உள்ளக விசாரணையொன்றை செய்வதாகவும் குறித்த பிரச்சினைணை கைவிடுமாறும் கோரியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது வவுனியா வைத்தியசாலையில் மரணித்த சிசுவின் பெற்றோருக்கு நீதி கிடைக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயிலின் முன்பாக இன்று (21) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்துள்ள சிசு
வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்றிரவு (20) அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாயொருவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு உயிரிழந்துள்ளதாக பெற்றோரினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு பல தடவை வைத்தியர்களிடம் கோரிய போதும் அதனை பொருட்படுத்தாமல் வைத்தியர்கள் செயற்பட்டமையினால் தனது சிசு இறந்து விட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனடிப்படையில், சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி பொதுமக்களால் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தாய்
குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது, “குழந்தையின் தாய் வலிதாங்க முடியாமல் பல மணி நேரங்கள் கதறிய போதும் அவருக்கு சிசேரியன் செய்யவில்லை.
இவ்வாறனவர்களை நம்பி இந்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எப்படி செல்ல முடியும்.
குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் எமக்கு துளியும் நம்பிக்கை இல்லை.
எனவே சுகாதார அமைச்சினுடாக ஒரு குழு நியமிக்கப்பட்டு இதற்கான நீதியான விசாரணையினை மேற்கொள்ள வேண்டும்.
சட்ட வைத்திய பரிசோதனை
அது போலவே சிசுவின் சட்ட வைத்திய பரிசோதனையினையும் கொழும்பு (Colombo) வைத்தியர்கள் மூலம் முன்னெடுக்க வேண்டும்.
அத்தோடு, பொறுப்பே இல்லாத இந்த வைத்தியசாலைக்கு மூன்று பணிப்பாளர்கள் இரண்டு நிர்வாக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது ஏன் என்று எமக்கு தெரியவில்லை எனவே இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கும்வரைக்கும் பொதுமக்கள் இங்கு மகப்பேற்றுக்காக வரவேண்டாம் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதேவேளை இன்று (21) மாலை சிசுவின் சடலத்தை பார்வையிட்ட நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/Wmem4ySgeNMhttps://www.youtube.com/embed/8HiCYsY4qoM?start=147