வவுனியா (Vavuniya) – ஓமந்தை காட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை மீட்க முயற்சி செய்த குழுவொன்றில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் (22) ஓமந்தை காவல்துறையினால் கைது செய்யபட்டுள்ளார்.
ஓமந்தை காட்டில் ஐந்து பேர் கொண்ட கும்பல் தங்கத்தை எடுப்பதற்காக பள்ளம் தோண்டிக் கொண்டிருந்த போது, காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்த நிலையில், அவர்களில் 4 பேர் காட்டுக்குள் தப்பியோடியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தங்கம்
அதனை தொடர்ந்து, ஐந்து பேர் கொண்ட குழுவில் ஒருவர் கைது செய்யப்பபட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து பூமிக்கு அடியில் உள்ள பொருட்களை சோதனை செய்யும் நவீன ஸ்கேனர் மற்றும் சில உபகரணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இருவர் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கங்கள் இருக்கும் இடத்தை அறிந்திருந்ததாகவும் அதனை எடுப்பதற்கே பள்ளம் தோண்டப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
மேலும், சந்தேகநபர் ஓமந்த கிராமத்திற்கு சற்று தொலைவில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் எனவும், வாடகை அடிப்படையில் பள்ளம் தோண்டவும் இடத்தை காண்பிக்கவும் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சந்தேக நபரை வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.