முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் (A. Amirthalingam) 97ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றுள்ளது.
அமிர்தலிங்கம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் குறித்த நினைவுப் பேருரையானது யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் நேற்றைய தினம் (24) இடம்பெற்றது.
அத்துடன் இந்த நிகழ்வில் அமிர்தலிங்கம் குறித்த நினைவு
நூலொன்றும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
நினைவுப் பேருரை
இதன்போது நினைவுப் பேருரையினை ஆற்றிய இந்தியாவில் இருந்து வருகை தந்த திராவிட கழகத்தின்
தலைவர் கி.வீரமணி ”கடந்த காலத்தில் பல இரத்தக்கறைகள் உள்ளன. அவற்றை நாம் கண்ணீர் விட்டு அழித்துவிட முடியாது.
மீண்டும் நாம் வாழ்வதற்கு இத்தனை இடர்பாடுகள் எமக்குள் இருந்தாலும் நாம் ஓரணியாக ஒன்று திரள வேண்டும். அந்த உணர்வோடு நாம் ஒன்றிணைவதனூடாகவே இதனை மாற்ற முடியும்.
நாம் இன்னும் உரிமைகளை பெறவில்லை. இலட்சக்கணக்கில் ஆயிரக்கணக்கில் மிகப்பெரிய இழப்புகளை பெற்றுள்ளோம் இவ்வாறு அனைவரும் ஒற்றுமையாக சிந்திக்க வேண்டும்.
அமிர்தலிங்கம் அவர்கள் மிகப்பெரும் ஆளுமை உள்ள மனிதர். பல்வேறு வழிமுறைகளில் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் தனது கருத்துக்களை விட்டுச் சென்றார்.
ஓரணியாக திகழ வேண்டும்
நான் ஒரு புது நோக்குடன் சிந்திக்கின்ற பொழுது இரண்டு விடயங்கள் உள்ளன. பொதுப் போராட்டம் பொது உரிமைக்கானது. நண்பன் யார் என்று சரியாக அடையாளம் காண வேண்டும். இது நம்மை பிரிக்கிறது என்ற இடத்தில் கவலைப்படக் கூடாது என்பதில் மட்டும் அக்கறை கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் முடிவல்ல. அவற்றைப்பற்றி சிந்திக்கின்ற பொழுது இங்கே உள்ள புகைப்படம் ஞாபகம் வருகிறது. தந்தை செல்வா தொடங்கி எவ்வுலகில் இருந்தாலும் இந்த ஊரில் இருந்தாலும் மக்களுடைய பிரச்சினைகளை நாம் படிக்கட்டாக மாற்றி மறக்கப்பட்ட இனத்தை மீண்டும் விழிப்புணர்வுடன் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஓரணியாக திகழ வேண்டும்.“ என தெரிவித்தார்.
இதேவேளை சிறப்புரையினை தென்னிந்திய திருச்சபையின் ஆயர் ஆதி வணக்கத்திற்குரிய கலாநிதி
வி.பத்மதயாளன் நிகழ்த்தியதுடன் தலைமை உரையினை மேல்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி இ.த.விக்னராஜா
நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், சுரேஷ்
பிரேமச்சந்திரன் எம்.கே சிவாஜிலிங்கம் மற்றும் தமிழரசு கட்சியின் பிரமுகர்கள்
பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.