சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலும் (Jaffna) மற்றும் திருகோணமலையிலும் (Trincomalee) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது வடக்கு கிழக்கு வலிந்து ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் சங்கத்தினரால் முன்னெடுப்படவுள்ளது.
இந்தநிலையில், போராட்டமானது (30.08.2024) காலை 10.00 மணிக்கு யாழ் அரியகுளசந்தியில் அரம்பித்து பருத்தித்துறை வீதியூடாக வேம்படிச்சந்தி, யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சந்திரசந்தி முனியப்பர் கோயில் வளாகம் வரை பேரணியாக சென்று மகஜர் சர்வதேச சமூகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் ஆகியும் தொடர்ச்சியாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 2700 நாட்களைக் கடந்தும் எந்தவித நீதியும் மற்றும் உரிமைகளும் கிடைக்காமையால் சர்வதேச நீதி பொறிமுறை ஊடாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு இனிவரும் காலங்களில் இப்படியான ஆட்கடத்தல் சம்பவங்கள் மீள் நிகழாமை வலியுறுத்தி குறித்த போராட்டமானது இடம்பெறவுள்ளது.
அத்தோடு, இப்போராட்டத்தின் ஊடாக நீதியினை பெற்றுக்கொள்வதற்கு அன்றைய தினம் அனைவரும் ஒன்று சேர்ந்து நூல் கொடுப்பதற்கு ஆதரவை வழங்கி அனைவரும் இப்பேரணியில் கலந்துக்கொண்டு எமக்கு வலுச்சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பேரணிக்கு மதத்தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், பொது அமைப்புக்கள், கடற்தொழிலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வரத்தகர்கள், பேருந்து உரிமையாளர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், இளைஞர்கள், யுவதிகள், பொது மக்கள் மற்றும் இதில் குறிப்பிடத் தவறவிடப்பட்ட அனைத்து உறவுகளும் அன்றைய தினம் எந்தவித வேறுபாடுகளுமின்றி பேரணியில் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.