நாடு வங்குரோத்தான பின்னர், 2022 ஆம் ஆண்டில் நான் அநுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவிடம் உதவி கேட்டேன் என்றும், அவர்கள் அனைவரும் என்னை வீழ்த்திவிட்டு செல்ல முற்பட்டனர் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்று (29) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அனைவருக்கும் அழைப்பு
”2022 ஆம் ஆண்டில் நான் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். அனுர, சஜித்திடம் உதவி கேட்டேன். அவர்கள் அனைவரும் என்னை வீழ்த்திவிட்டு செல்ல முற்பட்டனர்.
நாம் ஏற்படுத்திய நிலைத்தன்மையைப் பாதுகாக்கவே மீண்டும் போட்டியிடுகிறேன்.
அன்று நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி முற்றாகச் சரிந்து கிடந்தது.
அன்று விவசாயிகளுக்கு உரம் தேவைப்பட்டது.
அதனைப் பெற்றுக்கொடுக்க வழி செய்தேன். சுற்றாலாவைப் பலப்படுத்தினோம். அதற்கு உதவிகளை வழங்கிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஜனாதிபதியாக முயற்சி
அதனால் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ‘அஸ்வெசும’, ‘உறுமய’ திட்டங்களையும் செயற்படுத்தி, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம்.
அரச ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரித்தோம். அதற்கான நிதியை விவசாயிகளே தேடித்தந்தனர்.
எதிர்காலத்தில் கரும்பு உற்பத்திக்கும் நாம் உர மானியம் வழங்குவோம்.
நாட்டில் நிதி இருந்தால் மட்டுமே சலுகை வழங்க முடியும்.
எண் கணிதம் அறியாதவர்கள் இன்று ஜனாதிபதியாக முயற்சிக்கின்றனர். நாம் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம்.” என்றார்.