மினுவாங்கொடை அழகு நிலையமொன்றிற்கு தலைமுடியை அழகுபடுத்த சென்ற பெண்ணொருவருக்கு தலையில் பூசப்பட்ட இரசாயன கலவை விஷம் கலந்ததால் தலைமுடி முற்றாக உதிர்ந்துள்ளதாக மினுவாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒவ்வாமை காரணமாக தலைமுடி அனைத்தும் உதிர்ந்த நிலையில் பெண் தற்போது கம்பகா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒவ்வாமைக்கு காரணமான அழகு நிலைய உரிமையாளரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மினுவாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மினுவாங்கொட பொரகொடவத்த பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய பெண்ணொருவரே ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அழகு நிலையத்திற்கு தலைமுடி அழகுபடுத்த வருகை
இவர் கடந்த 30ஆம் திகதி காலை மினுவாங்கொடை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அழகு நிலையத்திற்கு தலைமுடி அழகுபடுத்துவதற்காக வந்துள்ளார்.
இங்கு அழகு நிலைய நிபுணர் பெண்ணின் தலையில் கெமிக்கல் மற்றும் க்ரீம் தடவி சிறிது நேரம் இருக்கச் சொன்னார். இதன்போது பெண்ணின் தலை அசௌகரியமாக உணர்ந்தநிலையில், அவள் தலையை ஆட்டியபோது, அவளுடைய முடி கொத்து கொத்தாக விழத் தொடங்கியது.
விசாரணைகள் ஆரம்பம்
இதனால் கம்பகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த பெண்ணின் தலைமுடி முற்றாக உதிர்ந்துள்ளது.
இது தொடர்பில், இந்த பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், மினுவாங்கொடை காவல்துறையினர், கம்பகா மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மினுவாங்கொடை காவல்துறையின் கூற்றுப்படி, கம்பகா பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று குறித்த அழகு நிலையத்திற்குச் சென்றபோதும், அழகு நிலையத்தின் உரிமையாளர் அதனை மூடிவிட்டு பிரதேசத்தை விட்டு ஓடிவிட்டார்.
தற்போது சம்பந்தப்பட்ட அழகு நிலையத்திற்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.