நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி தன்னிறைவு நிலையை எட்டியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “தற்போது, நாட்டின் தினசரி முட்டை உற்பத்தி 07-08 மில்லியனாக அதிகரித்துள்ளது, மேலும், முட்டையின் தினசரி நுகர்வு அதே அளவு வளர்ந்துள்ளது.
முட்டை விலை
நாளாந்தம் நாட்டிற்கு தேவையான முழு அளவிலான முட்டைகளை உற்பத்தி செய்ய முடிந்துள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி முட்டை விலை 38-42 ரூபாய் வரை குறைந்துள்ளது.
மேலும், கோழி இறைச்சி உற்பத்தி அதிகரித்து, தற்போது, கோழி இறைச்சியை அதிகமாக உற்பத்தி செய்யும் அளவிற்கு நாடு வளர்ந்துள்ளது.
கோழி இறைச்சியின் தினசரி தேவை சுமார் 500 மெட்ரிக் தொன் என்றாலும், கோழி இறைச்சியின் தினசரி உற்பத்தி 600 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளது.” என்றார்.