Courtesy: uky(ஊகி)
முல்லைத்தீவு (Mullaitivu) – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் கிராமத்திற்கான பிரதான வீதி அண்மையில் புனரமைப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வீதியின் ஒரு பகுதி மட்டும் கொங்கிறீற்று வீதியாக புனரமைப்பு செய்யப்படடது. இந்த புனரமைப்பின் போது தரமற்ற மணலைக் கொண்டு வீதியின் கொங்கிறீற்று கலவை தயாரிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே மணலின் தரமற்ற தன்மை தொடர்பில் சுட்டிக்காட்டியும் அது தொடர்பில் கவனமெடுக்கப்படவில்லை.
இப்போது பாதையின் புனரமைப்பு பணிகள் நிறைவுறும் நிலையை எட்டிவிட்டதாக உயிலங்குளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருப்பி அனுப்பப்பட்ட மணல்
உயிலங்குளம் பிரதான வீதியின் கொங்கிறீற்று பாதையமைப்புக்கு பயன்படுத்தப்பட்ட மணல் மற்றொரு கட்டுமானத்திற்காக வழங்கப்பட்டு அது அதன் தொழில்நுட்ப அதிகாரியினால் தரமற்ற மணல் என தீர்மானிக்கப்பட்டு மறுக்கப்பட்டு இருந்தது.
அதன் பின்னர், இப்போது அதே மணல், உயிலங்குளம் பிரதான வீதியின் கொங்கிறீற்று பாதையிடலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக உயிலங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் சார்பாக கருத்துரைத்தவர் குறிப்பிடுகின்றார்.
இரு தொழில்நுட்பவியலாளர்களும் வெவ்வேறு இடங்களில் தங்கள் துறைசார் படிப்புக்களை முடித்துள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஒரு தொழில்நுட்ப அதிகாரியால் கொங்கிறீற்றுக் கலவைக்கு பொருத்தமற்றது என மறுக்கப்பட்ட அதேவேளை மற்றொரு தொழில்நுட்ப அதிகாரியால் அந்த மணல் கொங்கிறீற்றுக் கலவைக்கு பொருத்தமானது என தீர்மானித்து கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது எந்த அடிப்படையில் சாத்தியமாகின்றது என மக்களால் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
மக்களின் முறைப்பாடு
துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உயிலங்குளம் பிரதான வீதி, அதாவது, துணுக்காய் பக்கமாக இருந்து வரும் போது உயிலங்குளம் கட்டு முடிவில் மேற் கொள்ளப்பட இருந்த கொங்கிறீற்று வேலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள மணல் சரி இல்லை என கிராம மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டு, கிராம அபிவிருத்தி சங்கத்தினர் அதனை உறுதி செய்திருந்தனர்.
அதன்பின்னர் மாங்குளத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு, எழுத்து மூலம் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த வித பலனும் இல்லை.
அதே மணலில் கொங்கிறீற்று இடப்பட்டு வேலை முடிவடையும் நிலையில் உள்ளது என இந்த விடயம் தொடர்பில் உயிலங்குளம் கிராம மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
பொதுமக்களின் நலனுக்காக அமைக்கப்படும் கட்டுமானங்களில் அவர்களது கருத்துக்களுக்கும் செவிசாய்த்து பணிகளை முன்னெடுக்க வேண்டும். அப்போது தான் அவை மக்களுக்கு பயனுடையதாக இருக்கும்.
தரமற்ற மணலைக் கொண்டு வீதியமைப்புக்கான கொங்கிறீற்று கலவை தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முல்லைத்தீவு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை முன்னெடுக்குமா?