கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது.
174
நாட்களாக மேற்கொள்ளப்பட்ட குறித்த போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்
நிறைவடையும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிருப்பு பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டனர்.
174 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
இது குறித்து அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழுகின்ற பொதுமக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து நடத்திக் கொண்டிருக்கின்ற மக்கள் போராட்டமானது இன்றோடு 174 வது நாளாகவும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.
ஆனாலும் எமது மக்கள் போராட்டத்தின் போது கலந்து கொண்டிருந்த பல அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் சார் தீர்மானங்களை முடிவுகளை எடுக்கக்கூடிய நபர்கள் மூலமாகவும் அரசுக்கு பல்வேறு செய்திகளை நாங்கள் வழங்கி இருந்தோம்.
தீர்வைப் பெற்றுத்தராத ஜனாதிபதி
எனினும் இந்த அரசு எமது மக்களுடைய போராட்டத்தை மதிக்கவோ அல்லது எமது மக்களுடைய நியாயமான போராட்டத்திற்கான தீர்வை வழங்குவதற்கோ முன் வந்திருக்கவில்லை.
இந்தப் போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது தனி நபர்களுக்கோ எதிரானது கிடையாது என்பதையும் இது ஒரு அரச நிர்வாக ரீதியான கட்டமைப்பை சீர் செய்வதற்கான போராட்டம் மாத்திரமே என்பதையும் வெளிப்படுத்துகின்றோம்.
இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி எனும் அடிப்படையில் தீர்வை வழங்கக்கூடிய உயர் அதிகாரத்தில் இருக்கும் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எமது வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாததுடன் நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டோம்.“ என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.