அநுர குமார திஸாநாயக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் செய்ததன் காரணமாக ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவியொன்றுக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்றம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அப்பதவியை இன்று (23) முதல் ஏற்றுக் கொண்டதன் காரணமாக, அத்திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற ஆசனத்தை இராஜினாமாச் செய்திருப்பதாக அவர் தனக்கு அனுப்பியுள்ள
கடிதத்தின் மூலம் அறிவித்து்ள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம்
இந்நிலையில், ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின், 66(இ) உறுப்புரையின் பிரகாரமும், 1988ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் கீழ் இதனைத் தெரிவிப்பதாக செயலாளர் நாயகம் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.