முல்லைத்தீவு (Mullaitivu) பரந்தன் ஏ 35 வீதியில் உள்ள வட்டுவாகல் பாலம் மற்றும்
புளியம்பக்கனை 10ஆம் கட்டை பகுதியிலுள்ள பாலம் ஆகிய இரு பாலங்களும் பல
ஆண்டுகளாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள்
ஏற்படுவதுடன் உயிரிழப்புக்களும் இடம்பெற்று வருகின்றன.
ஏ 35 வீதியில் மிக நீண்ட காலமாக ஆபத்தான நிலையில்
காணப்படும் வட்டுவாகல் பாலம் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான யுத்தம்
மற்றும் 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தம் என்பவற்றால்
கடுமையாக சேதத்துக்கு உள்ளாகியது
தற்போது குறித்த பாலம் சிறுசிறு திருத்த வேலைகள் செய்யப்பட்டு
போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகளின் அவசியம் குறித்து கடந்த 2013ஆம்
ஆண்டு முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு
கூட்டங்கள் மற்றும் மாகாண சபை ஆகியவற்றில் நடந்த கலந்துரையாடல்களில் இந்த
பாலத்தின் அவசியம் பற்றி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதிக விபத்துக்கள்
கடந்த காலங்களில் அதற்கான அமைச்சரவை தீர்மானங்களும் கொண்டுவரப்பட்ட போதும்
அதனை அமைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் குறித்த பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு
சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.

இதனால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் இடம்பெற்று பலர்
காயங்களுக்கு உள்ளாகி இருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதேபோன்று குறித்த வீதியின் புளியம்போக்கணை சந்திக்கு அண்மித்த பகுதியில்
உள்ள 10ஆம் கட்டை பாலமானது கடந்த 2021ஆம் ஆண்டில் புனரமைப்பு பணிகள்
ஆரம்பிக்கப்பட்டு அதன் பணிகளும் இன்றுவரை நிறைவடையாமல் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் குறித்த பாலத்தடியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக தற்காலிக பாலத்தின் இரு பகுதிகளிலும் 15க்கும் மேற்பட்ட
விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன் இரண்டு உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன.
எனவே, ஏ-09 வீதிக்கு அடுத்தபடியான போக்குவரத்து பாதையாகவும் வடக்கு
மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் போக்குவரத்து பாதையாகவும் உள்ள
குறித்த வீதியிலுள்ள இருபாலங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
எடுக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.










