காவல் நிலைய கட்டளைத் தளபதிகள் நியமனத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தலையிட மாட்டார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (25) காலை பொறுப்பேற்ற பின்னர் விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கடந்த ஆட்சியாளர்கள் பின்பற்றிய அரசியல் கலாசாரத்தை அவர்கள் மாற்றுவார்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறையினரின் பொறுப்பு
தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறானதொன்று இல்லை என்பதால் பழைய கலாசாரத்தை மாற்றி புதிய கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் ரீதியாக நட்பாக உள்ளவர் எவரேனும் தவறாக செயற்பட்டாலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
”இவ்வாறானதொரு மாற்றத்தை இந்நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்தனர், நாட்டு மக்கள் கடந்த காலங்களில் காவல்துறை மீது நம்பிக்கை இழந்திருந்தனர்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு காவல்துறையினரின் பொறுப்பு என்பதால் அதற்கு இடம் கொடுத்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் தவறான வழிமுறைகளை அகற்றி அரசியல் தலையீடு இல்லாத காவல்துறை சேவையை உருவாக்க வேண்டும்” எனவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.