Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஒருமைப்பாடு, சமத்துவம் மற்றும் அனைவருக்கும் நீதி ஆகியவற்றைக் கொண்ட புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் முயற்சியில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவிற்கு உலக தமிழர் பேரவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
தேர்தல் மற்றும் அதிகார பரிமாற்றம்
ஒரு பின்தங்கிய பூர்வீகத்திலிருந்து ஆரம்பித்து, தனது அரசியல் பயணத்தின் ஊடாக மக்களின் பிரதிநிதியாக நிலைத்திருக்கும் ஜனாதிபதி திஸாநாயக்கவின் சாதனைகள், அனைத்துப் பின்னணியிலிருக்கும் புதிய தலைமுறை இளைஞர்களை பெரிய கனவு காண தூண்டும் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமரான புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹரிணி அமரசூரியவை வாழ்த்துவதாக உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக தேர்தல் மற்றும் அதிகார பரிமாற்றம் ஆகிய இரண்டும் அமைதியாக நடந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் பிரசாரம் பெரும்பாலும் இன மற்றும் மத பேரினவாத சொல்லாடல்கள் இல்லாதது என்பதை ஒப்புக்கொள்கிறது, மேலும் இது எதிர்காலத்திற்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டுப் போரின் விளைவுகள்
நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் சமூகமும் அதன் வளர்ச்சிப் பாதையில் சம பங்குதாரர்களாக உணரும் போதுதான் உண்மையான மாற்றம் நிகழும் என்று உலக தமிழர் பேரவை உறுதியாக நம்புகிறது.
எனினும் புதிய ஜனாதிபதி மீது சிறுபான்மை சமூகங்கள் கொண்டுள்ள கணிசமான நம்பிக்கைப் பற்றாக்குறையையும் அச்சத்தையும் அவரும் அவரது கூட்டணிக் கட்சிகளும் இன்னும் சரிப்படுத்தவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உள்நாட்டுப் போரின் விளைவுகள், தீர்வு இல்லாமல் அவர்களைத் தொடர்ந்து வேட்டையாடுகின்றன, மேலும் பிராந்தியங்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு வேண்டும் என்ற அவர்களது அரசியல் அபிலாசை இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
இந்தநிலையில். தமிழ் மக்களின் நீண்டகாலக் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி திஸாநாயக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.