ஒரு கிலோ வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை 20 ரூபாவால் அதிகரிக்க நிதியமைச்சு (Minister of Finance) நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி வரியானது அதிகரிக்கும் பட்சத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிக்ககூடிய வாய்ப்புள்ளது.
இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கின்றமையினால் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் அபாயமும் உள்ளது.
வெங்காயத்திற்கான வரி
கடந்த நாட்களாக வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுள்ள உள்ளூர் விவசாயிகள் அறுவடைக்குரிய விலை கிடைக்காமையால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 120 முதல் 150 ரூபா வரையுள்ளமையினால் இவ்வாறான நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இவ்வாறு வெங்காயங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் பயிர்ச்செய்கைக்காக பெற்ற கடனை கூட செலுத்த முடியாத சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.
இது தொடர்பாக பொலன்னறுவை மற்றும் அநுராதபுர பிரதேச விவசாயிகளும் கவலை வெளியிட்டிருந்தனர்.
இதனால், அரசாங்கத்தின் பொறுப்பான தரப்பினரிடம் பெரிய வெங்காயத்தை கிலோ 275 முதல் 300 ரூபாய் வரையிலான விலையில் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உருளைக்கிழங்குக்கு வரி
அத்தோடு, தேர்தலுக்கு முன்னதான காலப்பகுதியில் உருளைக்கிழங்குக்கு நிரந்தர வரி விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனடிப்படையில், இது தொடர்பாக முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) கருத்து தெரிவித்திருந்ததுடன் உருளைக்கிழங்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், தற்போது உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.