தமிழ் நாட்டிலுள்ள திரையரங்கு ஒன்றில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப்பிழை இருந்ததால் 10 வயதுடைய சிறுமி ஒருவர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ் நாட்டின் கோயம்புத்தூர், பீளமேடு அடுத்த காந்திமாநகர் ஹட்கோ காலனியை சேர்ந்த பழனிச்சாமி மற்றும் கிருத்திகா ஆகிய தம்பதியினரின் 10 வயதுடைய பிரணவிகா என்ற மகள் தரம் 5இல் கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது குடும்பத்துடன் கடந்த 6ஆம் திகதியன்று திரைப்படம் பார்பதற்காக பிரபல மாலில் உள்ள திரையரங்குக்கு சென்றுள்ளார்.
விழிப்புணர்வு வாசகம்
இதன்போது, திரைப்படம் ஆரம்பமாவதற்கு முன்பாக போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு வாசகம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
அதில், “புகைப்பிடித்தால் புற்றுநோய் உருவாகும் மற்றும் உயிரைக் கொள்ளும்” என்ற வாசகம் ஒளிபரப்பாகியுள்ளது.
அதாவது, கொல்லும் என்பதற்கு பதிலாக கொள்ளும் என்று எழுத்துப் பிழையுடன் வாசகம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இதனை கண்டறிந்த சிறுமி, தனது தந்தையுடன் சென்று திரையரங்கு மேலாளரிடம் கூறியுள்ளார்.
முதலமைச்சருக்கு கடிதம்
அதற்கு அவர், “இந்த படத்தின் பிரதி மும்பையில் இருந்து வந்துள்ளது. எனவே எங்களால் பிழையை மாற்ற இயலாது என்று கூறியுள்ளார்.
இதன்பின்னர், வீடு திரும்பிய சிறுமி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “திரையரங்கில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்து பிழை உள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று சிறுமி குறிப்பிட்டுள்ளார்.