இலங்கையின் கடந்த அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்தை கைவிடுவதற்கு அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக திறைசேரியின் பிரதிசெயலாளர் ஆர்.எம்.பி ரத்நாயக்க (R.M.P. Rathnayake) தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்தை மாற்றீடு செய்வதற்காக புதிய யோசனைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னைய அரசாங்கத்தின் யோசனையை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்காது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பாய்வு
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அடுத்த மதிப்பாய்வில் சமர்ப்பிப்பதற்காக அரசாங்கம் பல மாற்று யோசனைகளை ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்திற்கு பதில் திறைசேரி அதிகாரிகள் பல மாற்று யோசனைகளை ஆராய்ந்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கம் புதிய திட்டங்களை முன்வைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் எதிர்பாப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த – மூன்றாவது மதிப்பாய்விற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.