நாட்டில் கடந்த சில நாட்களாக இராணுவத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சில சமூக வலைதள ஆர்வலர்களால் பொய்யான தகவல் அடங்கி வீடியோக்களை வெளியிட்டுவருவதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க (Major General KAN Rasika) குமார காணொளி மூலம் விளக்கமளித்துள்ளார்.
இராணுவத்தில் சிறப்பான எதிர்காலம் அற்ற உறுப்பினர்கள் சிலரினால் வழங்கப்பட்ட பொய்யான தகவல்களை முறையாக உறுதிப்படுத்திக்கொள்ளாமல் சமூக வலைதள ஆர்வலர்கள் தங்களது தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளை விளம்பரப்படுத்தும் குறுகிய நோக்கத்திற்காக இந்த வீடியோக்களை உருவாக்கியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறுகிய கால முடிவு அல்ல
மேலும், இந்த வீடியோக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில்,
இராணுவ முகாம்களின் படையினரை புதிய இடங்களில் நிலைநிறுத்துவது குறுகிய கால முடிவு அல்ல என்பதுடன் இது இராணுவத்தின் பொருத்தப்பாடு மற்றும் அளவுபரிமான ஒழுங்கமைக்கும் நீண்ட கால செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மேலும், இராணுவத்தின் கட்டளை மற்றும் நிர்வாகம், முப்படைகளின் சேனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.
இதன்படி, பொறுப்பற்ற சிலரின் சுய இலாபங்களுக்காக ஊடக நெறிமுறைகளுக்கு மாறாக பொய்யான தகவல்களைப் பரப்பி, இலங்கை இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நீண்டகால நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சாத்தியபாடற்ற முயற்சியாக இவ்வாறான செயல்களைச் சுட்டிக்காட்டுவதுடன் இதனால் எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வெறுப்புணர்வைத் தூண்டும் அறிக்கை
ஒரு சிலரின் இத்தகைய பொய்யான மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் அறிக்கைகளை இராணுவம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு நேரடி பொறுப்பான இராணுவத்தினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படும் பொய்யான தகவல்களுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் நம்பிக்கையை தளர்த்திக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.