வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் பல நாடுகள் விசேட பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ள போதிலும் சீகிரிய சுற்றுலாப் பகுதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறையில் இல்லை எனவும் 99 வீதமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வரகை தருவதாகவும் சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.
மத்திய கலாசார நிதியத்தின் சீகிரி திட்ட முகாமையாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில், இதுவரை எந்த நிறுவனத்தினாலோ அல்லது பாதுகாப்புத் திணைக்களத்தினாலோ தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
வழமையான செயற்பாடுகள்
மத்திய கலாசார நிதியத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சீகிரிய சுற்றுலா காவல்துறையினர் வழமை போன்று செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
பயண எச்சரிக்கை
எவ்வாறாயினும், அண்மைக்காலமாக பல வெளிநாடுகளினால் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இன்று (24) காலை சீகிரியாவை பார்வையிடுவதற்காக அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அம்பாறை அறுகம்பை சுற்றுலா பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா உட்பட பல நாடுகள் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.