கண்டியில் இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய, கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா ஹோட்டல்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்பிலான தினசரி அறிக்கைகளை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் இஸ்ரேலியர்கள் தங்கும் சுற்றுலா விடுதிகளுக்கு விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விசேட ரோந்து வேலைத்திட்டம்
கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கமைய இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலா விடுதிகள் தொடர்பில் விசேட ரோந்து வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சுறுத்தல் காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதரகம் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், எனவே அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.