2024 பெருபோகத்திற்கான 25,000 ரூபா உர மானியம் வழங்க ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யு.பி. ரோஹன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன் முதற்கட்டமாக விவசாயிகளுக்கு தலா ரூ.15,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அம்பாறை மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 670 விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 630 ஹெக்டேயருக்கு 9.5 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட பணம்
அதன் இரண்டாம் கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 4,475 விவசாயிகளுக்கு 46.5 மில்லியன் ரூபாவும், மூன்றாம் கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 4,219 விவசாயிகளுக்கு 57.5 மில்லியன் ரூபாவும், நான்காம் கட்டத்தில்12 மாவட்டங்களிலும் உள்ள 4,804 விவசாயிகளுக்கு 47.7 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
திறைசேரியிலிருந்து இன்று (04) 279.4 மில்லியன் ரூபா பெறப்படவுள்ளதாகவும், அது 22,419 விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 19 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் மொத்தமாக 441.8 மில்லியன் ரூபா விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், இரண்டாம் கட்டமாக வழங்கப்படும் 10,000 ரூபா தொகை, பயிர்ச்செய்கை ஆரம்பித்து இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.