இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு 50 ரூபா விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டிருந்தது.
அதன் செல்லுபடியாகும் காலம் நவம்பர் 1 ஆம் திகதி முடிவடைய இருந்த நிலையில் அரசாங்கம் குறித்த விசேட வர்த்தக பண்ட வரியை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பதாக கூறியுள்ள போதிலும், அந்த வரிகளை அறவிடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாக மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அநுர அரசாங்கம் சாதாரண டீசல், பெட்ரோல் விலைகளைக் குறைக்க சந்தர்ப்பம் இருந்த போதிலும், ஒக்டேன் 95 பெட்ரோலின் விலையையும், சுப்பர் டீசல் விலையையும் குறைத்து தனவந்தர்களுக்குச் சலுகை வழங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.