Courtesy: uky(ஊகி)
முல்லைத்தீவில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றின் அருகில் ஏற்பட்டு வரும் சூழல் மாற்றம் தொடர்பில் சமூக ஆர்வளர்களினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கிராமத்தின் பொது விளையாட்டு மைதானமாக இது இருந்து வரும் அதேவேளை அதன் அருகில் பயன்பாட்டு கழிவுகளை வீசும் செயன்முறை நாளடைவில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த மாற்றமானது எதிர்காலத்தில் பாரிய சமூகப் பிரச்சனையாக மாறிவிடும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக யாராலும் கவனமெடுக்கப்படாததால் தொடர்ந்து பயன்பாட்டு கழிவுகளை வீசும் செயற்பாடு அதிகரித்தும் சொல்வதை அவதானிக்க முடிகின்றது.
மைதானத்தின் அருகில்
முல்லைத்தீவு குமுழமுனையில் உள்ள பொது விளையாட்டு மைதானம் அருகே மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த செயற்பாடு தொடர்பில் இதுவரை யாரும் கவனமெடுக்காத நிலை இருந்து வருகின்றது.
விளையாட்டு முயற்சிக்காக இளைஞர்கள் ஒன்று கூடும் இடமாக விளையாட்டு மைதானம் காணப்படும் நிலையில், இது தொடர்பில் அவர்களால் கவனிக்கப்படாதது கவலைக்குரிய விடயமாகும் என ஆர்வளர்களின் கருத்துக்கள் வெளிப்படகிறது.
குமுழமுனை வாழ் மக்களே இந்த பொருத்தமற்ற சூழல் மாற்றத்திற்கு காரணமென விமர்சனங்கள் எழுப்பப்படுகிறது.
மைதானத்தில் இருந்து தண்ணீரூற்று நோக்கிய திசையில் நூறு மீற்றர் நீளத்திற்கு வீதியின் இருபுறங்களிலும் பயன்பாட்டு கழிவுகளை கொட்டி வருகின்ற நிலை தொடர்கின்றது.
அதிகரித்துச் செல்கின்ற நிலை
ஆரம்பத்தில் ஒரு சிலரால் மட்டுமே கொட்டப்பட்டு இருந்த கழிவுகள் இப்போது பலராலும் கொட்டப்பட்டு வருகின்றது.
வீதியோரங்களின் இருபக்கங்களிலும் அதிகளவான பயன்பாட்டு கழிவுகள் (குப்பைகள்) கொட்டப்பட்டு அவை அதிகமாக சேர்ந்து வருகின்றன.
நாளுக்கு நாள் இது அதிகரிப்பதால் பாரியளவிலான சூழல் அசௌகரியங்கள் ஏற்படும் என்ற அச்ச நிலை ஏற்படுவதும் தவிர்க்க முடியாது?
குப்பைகளை மட்டுமல்லாது சீமெந்து கட்டட கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம்.
கற்குவாரி என மக்களால் அழைக்கப்படும் கிரவல் அகலப்பட்ட ஆழமான குழிகளுக்குள்ளும் குப்பைகள் கொட்டப்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாரிகாலங்களில் அதிகளவு நீர் தேங்கும் இந்த குழிகளுள் குப்பைகள் கொட்டப்படுவது ஆரோக்கியமானதாக இருக்காது.
அக்கறையற்ற மக்கள்
இது தொடர்பில் குமுழமுனை மக்களிடையே எமது செய்தியாளர் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது யாரொருவரும் இது தொடர்பில் கவனமெடுத்ததாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவரை குறை சொல்லி செல்வதோடு பிரதேச சபையினர் மீதும் குற்றம் சுமத்துமாறு அவர்களது கருத்துக்கள் இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தங்கள் வீட்டுக்கழிவுகளை வீதியில் கொட்டி விடுவதிலும் பார்க்க தங்கள் வீட்டுக்காணிகளினுள்ளேயே அவற்றை முகமை செய்தல் நல்லது.
அவ்வாறு மேற்கொள்ள முயற்சித்தால் குப்பைகள் நிலங்களில் உக்கலடைந்து மண் வளத்தையும் அதிகரிக்கும் என பாடசாலை மாணவர்கள் சிலரின் கருத்துக்கள் அமையப்பெற்றுள்ளது.
விளையாட்டு கழகங்களின் அங்கம் வகிக்கும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இது தொடர்பில் கவனமெடுத்தால் கழிவுகளை வீதியோரங்களில் கொட்டுவதை தவிர்க்க வழிகாட்ட முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.