நாளையதினம் (21) கூடவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக கலாநிதி அசோக ரன்வல (Ashoka Ranwala)நியமிக்கப்படவுள்ளதாக நம்பகமான அரசாங்க வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரான ரன்வல, இவ்வருட பொதுத் தேர்தலில் கம்பகா(Gampaha) மாவட்டத்தில் போட்டியிட்டு 109,332 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பகா மாவட்டத்தின் விருப்பு வாக்கு பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர்
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினராகவும் உள்ள அசோக ரன்வல, உயிர் தலைமுறை பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளராகவும்(Director of Biogeneration Economics Research Institute) கடமையாற்றியுள்ளார்.
பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றிய ரன்வல, தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து வலுவான தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
ரன்வல பியகம தொகுதியை மையப்படுத்தி தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.