ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோருக்கு தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்க கலந்தோலோசித்து வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய (21.11.2024) அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எரான் விக்ரமரத்ன மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோர் கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளதாகவும் ஹர்ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பட்டியல் பிரச்சினை
அத்துடன், கட்சியின் தேசிய பட்டியல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு வாழ் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தேசிய பட்டியல் ஆசனமொன்றை வழங்குமாறு பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) தலைவர் செந்தில் தொண்டமான்(senthil thondaman) வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு மாவட்டம் மற்றும் மேல்மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதி ஒருவர் தேவை என்பதை எடுத்துரைத்த செந்தில் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனே(mano ganeshan) அதற்கு பொருத்தமானவர் என தெரிவித்துள்ளார்.