மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தற்போதைய அரசாங்கத்தை தெரிவு செய்துள்ளதாகவும், அந்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அனைவரும் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமென மல்வத்து பீடாதிபதி அதி வண. திப்போடுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர்( Ven. Thibbotuwawe Sri Siddhartha Sumangala Thera) தெரிவித்துள்ளார்.
ஏனைய அனைத்துப் பிரச்சினைகளும் பொருளாதாரப் பிரச்சினைகளின் அடித்தளத்தில் இருந்து எழுவதாகவும், நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி(Prof.Hiniduma Sunil Senevi) மற்றும் பிரதியமைச்சர் கமகெதர திஸாநாயக்க(Gamagedara Dissanayake) ஆகியோர் நேற்று (22) மல்வத்தை மகா விகாரைக்கு விஜயம் செய்து மகாநாயக்கர்களிடம் ஆசீர்வாதம் பெறச் சென்ற போதே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
கலாசார சீரழிவில் சிக்கி திணறும் நாடு
சிறி தலதா மாளிகைக்கு சென்று வழிபட்ட பின்னர் மல்வத்தை மகா விகாரைக்கு வருகை தந்த அமைச்சர்கள் மாநாயக்க தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் சுனில் செனவி கூறுகையில், பொருளாதார நெருக்கடிக்கு மேலதிகமாக, நாடு அண்மைக்காலமாக குறிப்பிடத்தக்க கலாசார சீரழிவை எதிர்கொண்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் தீவிர கவனம் செலுத்துவதால், வேறு பல பிரச்சினைகள் கவனிக்கப்படாமலும், மறைக்கப்பட்டும் உள்ளன என்று கூறினார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நாட்டின் மிக முக்கியமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அமைச்சுகளில் ஒன்றாகவும், மக்களின் வாழ்வில் நீண்டகால செல்வாக்கு செலுத்துவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மீது இது தொடர்பில் பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவருடனான சந்திப்பைத் தொடர்ந்து அமைச்சர்கள் மல்வத்தை பீடத்தின் பிரதி பீடாதிபதி அதி வணக்கத்துக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரரையும் சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
அமைச்சர்கள் முன்னிலையில் ஜனாதிபதி வலியுறுத்திய விடயம்
அவர் தனது உரையின் போது, பல்வேறு குழுக்கள் ஆலோசனைகளை வழங்கும்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.அனைத்து நடவடிக்கைகளும் கவனமாக சிந்திக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
அண்மையில் ஜனாதிபதி சகல அமைச்சர்கள் முன்னிலையிலும் தமது அதிகாரத்தை மீறக் கூடாது என வலியுறுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அனைவரும் செயற்படுவார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.