முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், பாலத்தின் ஊடான பயணத்தை தவிர்க்க பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மழை, வெள்ளம் காரணமாக இப்பாலத்தினூடாக பயணம் செய்யும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
பாலம் வெளியே தெரியாதபடி, வெள்ளம் சூழ்ந்த நிலையில், அங்கு விபத்து ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் பாலத்தின் இருமருங்கிலும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மின் இணைப்புக்களும் சேதம்
இந்நிலையில், முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளைக்கு செல்ல கேப்பாபிலவு ஊடாக மாற்றுப் பாதையை பயன்படுத்த அறிவறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வட்டுவாகல் பாலத்திற்கு நேரடியாகச் சென்று, வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள குறித்த சிக்கல் நிலைதொடர்பில் ஆராய்ந்தார்.
குறிப்பாக இவ்வாறு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உதவி மாவட்ட செயலாளருக்கு தெரியப்படுத்தியதுடன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமாருடனும் இந்த போக்குவரத்துச் சிக்கல் நிலைகுறித்து பேசியிருந்தார்.
பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது வீதியில் நின்ற மரம் வேருடன் சாய்ந்ததில்
வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மின் இணைப்புக்களும் சேதமடைந்துள்ளதுடன், சிறிது நேரம் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது
போக்குவரத்து பொலிஸார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து குறித்த மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.