சுற்றுலா இலங்கை(sri lanka) அணிக்கும் தென்னாபிரிக்க(south africa) அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் முதல் இன்னிங்ஸை விளையாடிய தென்னாபிரிக்கா அணியை 191 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இலங்கை அணி தனது முதல் இனிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
தென்னாபிரிக்காவின் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இப்போட்டி நேற்று(27) தொடங்கியதுடன் இன்று (28) இரண்டாவது நாள் ஆட்டமாகும்.
தாக்குப்பிடித்த அணித்தலைவர்
இலங்கையின் பந்துவீச்சில் சரிந்த தென்னாபிரிக்க விக்கெட்டுக்களில் அணித்தலைவர் டெம்பா பவுமா ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார்.
அவர் 117 பந்துகளில் 70 ஓட்டங்கள் மற்றும் கேசவ் மகராஜ் 24 ஓட்டங்கள் எடுத்ததைத் தவிர, வேறு எந்த துடுப்பாட்ட வீரரும் 20 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை.
இலங்கை தரப்பில் அசித்த பெர்னாண்டோ 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 70 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இவர்களைத் தவிர, விஷ்வா பெர்னாண்டோ (2/35), பிரபாத் ஜெயசூர்யா (2/24) தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென்னாபிரிக்க அணி
நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா முதலில் தென்னாபிரிக்க அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார்.
ஆனால், நேற்று 20.4 ஓவர்கள் மட்டுமே விளையாட முடிந்தது.
நாள் முழுவதும் மழை பெய்ததால், போட்டி முன்கூட்டியே முடிக்கப்பட்டது.
அப்போது தென்னாபிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நிலைகுலைந்த இலங்கை அணி
இதனையடுத்து தனது முதல் இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி தென்னாபிரிக்க வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்டுக்களை பறிகொடுத்து 42 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணிதரப்பில் கமிந்து மென்டிஸ்13, லகிரு குமார 10 ஓட்டங்களை கூடுதலாக பெற்றதை தவிர மற்றைய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.இதில் 05 பேர் டக்அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.
தென்னாபிரிக்கா தரப்பில் மார்கோ ஜேன்சன்07 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.