காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களது போராட்டத்தை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம்
எடுத்த இராணுவ புலனாய்வாளர் ஒருவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த இடத்திலிருந்து துரத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று
(10.11.2024) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
துரத்தப்பட்ட நபர்
இதன்போது, சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர்
போராட்டக்காரர்களின் அருகே சென்று ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்நிலையில், ஒவ்வொரு உறவுகளையும் புகைப்படம் எடுக்க வேண்டிய தேவை என்ன என கூறி அந்த இடத்திலிருந்து அவர் துரத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டங்களை இராணுவத்தினர், பொலிஸார் , சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் போன்றோர் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.