எங்களுடைய தமிழ் வைத்தியர்களை பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்ற “சேர்” வியாதியை நினைத்தால் ஒரு பக்கம் வெட்கமாக இருக்கிறது, மறு பக்கம் கோபம் கோபமாக வருகின்றது.
“Call me Sir” என்று ஒரு சிரேஷ்ட வைத்தியர் கூறியதை அவருக்கே தெரியாமல் ஒலிப்பதிவு செய்து வெளியே கசியவிட்டு அனுதாபம் தேடி எம்பியானவர் தான் வைத்தியர் அர்ச்சுனா.
ஆனால், அதே அர்ச்சுனா நேற்று யாழ் வைத்தியாலைக்குள் நுழைந்து மாவட்டப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி முன்பாக கால்மேல் கால்போட்டு அமர்ந்தபடி, “நீங்கள் என்னை சேர் என்றுதான் அழைக்கவேண்டும்” என்றும் “நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பறவாயில்லை, என்னை சேர் என்று தான் அழைத்தாக வேண்டும்” என்று அடாவடி புரிகின்ற காட்சியைப் பார்க்கின்ற போது இவர்களுக்கெல்லாம் என்ன தான் நடந்துவிட்டது என நினைக்கத் தோன்றுகின்றது.
அது மாத்திரமல்ல, வைத்தியசாலை ஊழியர் ஒருவரை அவரது நெஞ்சில் கையைவைத்துத் தள்ளிவிட்டதுடன் “வாயை மூடுடா ராஸ்கல்” அது இது என கண்டபடி அந்த ஊழியரை வைத்தியர் அரச்சுனா பலர் முன்னிலையில் பகிரங்கமாகத் திட்டுவதான CCTV காட்சி தற்பொழுது வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்திவருகின்றது.
“உனக்குத் தெரியுமா நான் யாரென்று, CID இடம் பிடித்துக்கொடுப்பேன்” என்று அந்த ஊழியரை அவர் மிரட்டுவதையும் அந்த காணொளியில் காண முடிகின்றது.
சக மனிதர்களையும், அரச ஊழியர்களையும் மதித்துப் பேசுவதற்கு முதலில் மக்கள் பிரதிநிதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தெரு ரவுடிகள் போன்றும், சினிமாக்களில் வருகின்ற தாதாக்கள் போன்றும் நடந்துகொள்ளாது பதவிகள் உயருகின்ற போது தனது பண்புகளையும் உயர்திக்கொள்வற்கு அர்ச்சுனா என்கின்ற மக்கள் பிரதிநிதி கற்றுக்கொள்ள வேண்டும்.
“என்னை சேர் என்று அழையுங்கள், உனக்குத் தெரியுமாடா நான் யார் என்று ராஸ்கல்” இவ்வாறு நீங்கள் அழைக்கின்ற நபர்கள்தான் உங்களுக்கு வாக்களித்து உங்களை நாடாளுமன்றம் அனுப்பிவைத்தவர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
நீங்கள் சீ.ஐ.டி.யிடம் பிடித்துக்கொடுக்கமுனையும் அந்தத் தமிழ் இளைஞனைத்தான் நீங்கள் இன்று நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றீர்கள் என்பதை தயவுசெய்து உணர்ந்துகொள்ளுங்கள்.
மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் தனது தனிப்பட்ட காழ்ப்புணர்வு அழுக்குகளைக் கக்குகின்ற காரியத்தைத்தான் நீங்கள் தொடர்ந்துசெய்வீர்களாக இருந்தால், உங்களை நாடாளுமன்றம் அனுப்பிவைத்த யாழ் மக்கள் உங்களையிட்டு வெட்கப்பட்டு நிற்பார்கள் என்பது மாத்திரமல்ல, உங்களது அரசியல் எதிர்காலத்துக்கும் கூட நிச்சயம் ஆப்பு வைத்துவிடுவார்கள்.
உங்களைப் போல அதிகார வெறியில் ஆடிய பல நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு நமட்டுச் சிரிப்புடன் கடந்துசென்ற பண்பாளர்கள் நிறைந்துள்ள மண்ணில் நின்று நீங்கள் கூத்தாடிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதை ஒரு போதும் மறந்துவிடவேண்டாம்.
https://www.youtube.com/embed/-1c-NgbfvKo