பல தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை புதுப்பிக்க, இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தை விரிவடைந்துள்ளதால், இந்தியாவுடனான எஃப்டிஏ என்ற இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு தொடர வேண்டும் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்து
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தை, இலங்கை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், எதிர்கட்சிகள் கூறுவது போன்று, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையில் (ETCA), இலங்கை அரசாங்கம் ETCA வில் கையெழுத்திடவில்லை என்றும், இந்த விவகாரத்தில் மேலும் விவாதங்களைத் தொடர மட்டுமே ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதேநேரம், இலங்கையின் 1,500 சிவில் ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் திருத்தத்திற்கான நெறிமுறை ஆகியவை தொடர்பான, இரண்டு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டதாக அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.