ஹட்டன் – மல்லியப்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற தனியார் பயணிகள் பேருந்து விபத்து தொடர்பிலான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.
குறித்த விபத்தில்பாதிக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த பேருந்தின் சாரதியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம், உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று (21) காலை ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இந்த பேருந்து மல்லியப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது.
வளைந்து செல்லும் வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் விழுந்தது.
3 பேர் பலி
இந்த விபத்தில் சாரதி, உதவியாளர் உட்பட 53 பேர் படுகாயமடைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்தனர்.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும், கண்டியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரும், மேலும், பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.
இதேவேளை, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் விபத்தின் போது பதிவான காணொளி தற்போது வௌியாகியுள்ளது.
முன்னதாக இந்த காணொளி அழிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.