அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலையும் முன்னெடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில், அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை எதிர்வரும் 10ஆம் திகதிவரை நீடிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதேநேரம், அமைச்சரவை அங்கீகரித்த அளவுக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்துக்கு இயலாமல் போயுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் விநியோகஸ்தர்களிடமிருந்து எஞ்சிய அரிசி தொகை கிடைக்கப்பெறும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி இறக்குமதி
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் சார்பில் அரிசி இறக்குமதி செய்வதற்காக பொறுப்பளிக்கப்பட்ட அரச வர்த்தக கூட்டுத்தாபனம் மற்றும் சதொச நிறுவனத்தின் செயற்பாடுகளால் இவ்வாறு அரிசி இறக்குமதியில் தாமதம் ஏற்படவில்லை.
விநியோகஸ்தர்கள் எதிர்நோக்கிய சிக்கல் காரணமாகவே, அரசாங்கம் இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்த அளவு அரிசியை, இலக்கு வைக்கப்பட்ட காலத்தினுள் இறக்குமதி செய்ய முடியாமல் போனது.” என தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சந்தையில் அரிசியை பெற முடியாததுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கட்டுப்பாட்டு விலையில் மாற்றம்
மேலும், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரியை நீக்குவதற்கு அல்லது கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோருகின்றனர்.
அத்துடன், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி 220 ரூபாவுக்கே தங்களுக்கு வழங்கப்படுவதாகவும் அதனை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்வது சிரமம் எனவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பான அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலையும் முன்னெடுக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/9tGLowfZ0b8