70 வயதுடைய பெண் ஒருவரை விச ஊசி போட்டு கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அடையாளம் தெரியாத ஒருவர், குறித்த பெண்ணை அவரது வீட்டிற்கு அருகில் வைத்து சந்தித்ததுடன் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஊசியை பெண்ணின் உடலில் செலுத்தியுள்ளார். இதன்பின்னர் அவர் பகுதியை விட்டு உந்துருளியில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
காணிப்பிரச்சினையுடன் தொடர்புடைய கொலை
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக தனது அண்டை வீட்டாருக்குத் தகவல் தெரிவித்து, மாத்தறையில் உள்ள பதீகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மாத்தறை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு நான்கு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இதனையடுத்து குறித்த கொலை தொடர்பாக திக்வெல்ல பொலிஸார் விசாரணை நடத்தினர்.
அதேநேரம் இது தற்போது நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் காணிப்பிரச்சினையுடன் தொடர்புடைய கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் உறவினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளும் பொலிஸார், அடையாளம் தெரியாத ஆணின் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, அந்தப் பெண்ணைச் சுற்றி இடம்பெற்ற சம்பவங்களை கண்டறிந்துள்ளனர்.
இதன்படி கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில்; வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.