யாழ்ப்பாணத்தில்(Jaffna) தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, “வல்வை பட்டத் திருவிழா – 2025” மிக பிரம்மாண்டமாக இடம்பெற்றுள்ளது.
இந்த மாபெரும் நிகழ்வு வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்று (14) நடைபெற்றுள்ளது.
குறித்த பட்ட போட்டியில் சுமார் 130 பட்டங்களை அதனை வடிவமைத்தவர்கள் விண்ணில் பறக்கவிட்டுள்ளனர்.
பட்ட போட்டி
அவற்றில் “உயிர்த்தெழும் ராகன்” பட்டம் முதலாமிடத்தையும், “மின் பிறப்பாக்கி பட்டம்” இரண்டாம் இடத்தினையும் , “ஹெலிகாப்டர் மூலம் தூக்கி செல்லும் திரையரங்கு” பட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.
அத்துடன், இந்த நிகழ்வில் கல்விச் சாதனையாளர்களையும் ஆளுநர் கௌரவித்துள்ளார்.
இங்கு பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டச் செயலராக 2018ஆம் ஆண்டு இருந்தபோது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்ததுடன் இந்த நிகழ்வு தொடர்ச்சியாக சிறப்பாக இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார்.
யாழ். மண்ணின் பெருமை
யாழ். மண்ணின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் இந்தப் போட்டிகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், இது பாராட்டப்படவேண்டிய விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒவ்வொருவரதும் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பமாக இந்தப் பட்டப்போட்டி அமைந்துள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக சிந்தித்து பட்டங்களை உருவாக்குவது சிறப்பானது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமாரும் கலந்து கொண்டுள்ளனர்.