தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து செய்கை. இலங்கையில்
விளைவிக்கப்படும் தானியங்களில் உளுந்தும் முக்கியமானது. உளுந்து செய்கையானது
வடக்கில் வவுனியாவில் (Vavuniya) அதிகமாக செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.
உளுந்துக்கான
கேள்வியானது அதிகமாக இருக்கின்றது. உளுந்துச் செய்கைக்கான நிலங்கள் இருந்தும்
இன்றும் எமது நாடு உளுந்தினை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையிலேயே உள்ளது.
அதற்கு உளுந்து செய்கையில் ஈடுபடும் செய்கையாளர்கள் எதிர்நோக்கும்
பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்காமையும் ஒரு காரணமாகும்.
உளுந்து செய்கை
பொதுவாக
மாரி காலங்களில் தமது மேட்டு நிலங்களிலும், சேனை நிலங்களிலும் உளுந்து செய்கை
வவுனியாவில் மேற்கொள்ளப்படுவதுடன், சிறுபோக காலங்களில் வயல்களிலும் சிறியளவில்
மேட்டு நிலங்களிலும் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.
2024-2025 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில்
வவுனியாவில் உளுந்து செய்கை பண்ணப்பட்டது.
இருப்பினும் சீரற்ற காலநிலையால்
ஏற்பட்ட வெள்ளத்தினாலும், நோய் தாக்கத்தினாலும் இம்முறை உளுந்து
செய்கையாளர்கள் பலர் பாதிப்படைந்துள்ளதுடன் பயிற் செய்கைக்கு செலவு செய்த
பணத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
2024-2025 கால போகத்தில் தீபாவளிக்கு முன்னர் விதைத்தவர்கள் அதிக மஞ்சள் நோய்
தாக்கத்திற்கு முகம் கொடுத்துள்ளார்கள். தீபாவளிக்கு பின்னர்
விதைத்தவர்களுக்கு மஞ்சள் நோய் தாக்கம் குறைவாக ஏற்பட்டுள்ளது.
பூக்கின்ற
காலத்தில் இந்த மஞ்சள் நோய் தாக்கம் ஏற்படுவதால் புதிய காய்கள் உருவாகி வருவது
பாதிக்கப்படுகிறது. இதனால் விளைச்சலின் அளவு குறைவாகவுள்ளது.
மஞ்சள் நோய்
மஞ்சள் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் தொடர்பில் மாவட்ட பிரதி
விவசாய பணிப்பாளர் மாலினி முரளிதரனிடம் கேட்ட போது,
மஞ்சள் நோய் என்பது வைரஸ் நோய். பூச்சிகள் காவி பரப்புகின்றது. இதை
ஆரம்பத்தில் இருந்து கட்டுப்படுத்த வேண்டும்.
திரவ பசளைகளை இலைகள் மூலம்
வழங்குவதன் மூலம் பயிரை வீரியமடையச் செய்யலாம். பயிர் வீரியமாக இருக்கும் போது
பூச்சி, நோய் தாக்கம் குறைவாக இருக்கும். அத்துடன் உளுந்தை விதைப்பதற்கு
முன்னர் சணல், சோளம் போன்றவற்றை எல்லைப் பயிர்களாக இரண்டு அல்லது மூன்று
வரிசைகளில் நட்ட பின் நடுவில் உளுந்தை விதைப்பதன் மூலம் நோய் தாக்கத்தை
கட்டுப்படுத்த முடியும்.
இவைதவிர, விதைப் பரிகரணம் செய்வதன் மூலம் ஆரம்ப
காலத்தில் ஏற்படும் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். வெயில் காலமாக
இருந்தால் மஞ்சள் நோய் தாக்கமும் அதிகமாக இருக்கும்.
இதனால் நாம் உளுந்தை
விதைக்கும் போது 10 கிலோ உளுந்துடன் ஒரு கிலோ சணலை கலந்து விதைத்தால் நோய்
தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இதனால் பயிருக்கான வெப்பம் குறைக்கப்படும்.இதன் மூலம் மஞ்சள் ஆவதை கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது உளுந்து அறுவடையை மேற்கொள்கிறார்கள்.
அவர்களுக்கு தற்போது உரிய விலை கிடைக்கவில்லை என்பது குறையாகவுள்ளது.
பொருளாதார நெருக்கடி
குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்கள் அதில் இருந்து
மீள வேண்டும் என்பதற்காக பிறரிடம் கடன் வாங்கயும், தம்மிடம் இருந்த நகைகளை
அடைவு வைத்தும், நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றும் உளுந்து செய்கையை
மேற்கொண்ட போதும் நோய் தாக்கத்தால் விளைச்சலின் அளவு குறைவடைய, மறுபுறம்
அறுவடை செய்யும் உளுந்தை கூட நியாய விலையில் விற்க முடியாது தடுமாறுகின்றனர்.
உளுந்து வியாபாரிகள், இடைத்தரகர்கள் என உளுந்தை 300 – 400 ரூபாய்க்குள்
கொள்வனவு செய்து வருவதுடன், அந்த உளுந்திலும் பல சாட்டுப் போக்குளைச் சொல்லி
விலைகளை குறைத்து கொள்வனவு செய்கின்றனர்.
கடைகளில் 600- 800 ரூபாய் வரை
உளுந்தின் விலை இருக்கின்ற போதும் செய்கையாளர்களுக்கு அதில் அரைவாசி பணம் கூட
கிடைக்காத நிலை தொடர்கிறது.
உண்மையில் அறுவடைக் காலத்தில் விற்பனைக்கு கொண்டு செல்லும் போது விலை குறைவாக
தான் இருக்கும். உளுந்தை பத்திரமாக வண்டு மற்றும் பூச்சி தாக்கம் இல்லாது
பாதுகாக்க வேண்டும்.
விலை அதிகரிக்கும் காலங்களில் அதனை விற்பனை செய்ய
வேண்டும்.காற்று புகாவ்ண்ணம் 300 கேச் பொலித்தீனில் பொதி செய்து வைத்திருக்க
முடியும். அல்லது 5 லீற்றர் குடிநீர் வரும் போத்தலில் கூட உளுந்தைப் போட்டு
பாதுகாப்பாக மூடி வைக்க முடியும்.
உளுந்திற்கான விலை
அரசாங்கம் உளுந்திற்கான விலை தொடர்பில்
கவனம் செலுத்தி வருகிறது என பிரதி விவசாய பணிப்பாளர் மாலினி முரளிதரன்
தெரிவித்துள்ளார்.
நோய் தாக்கம், விலை கிடைக்காமை என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ள உளுந்து
செய்கையாளர்களின் வாழ்க்கையுடன் இயற்கையும் விளையாடி வருகிறது. வவுனியாவில்
உளுந்து அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது பெய்து வருகின்ற மழையும்
உளுந்து செய்கையாளர்களை பாதித்துள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட உளுந்து
செய்கையாளர்களுக்கு இழப்பீட்டை வழங்க அரசாங்கமும், உரிய அதிகாரிகளும் முன்வர
வேண்டும். அதன் மூலமே எதிர்வரும் காலங்களிலும் மக்களை உளுந்து செய்கையில்
ஈடுபட தூண்ட முடியும்.
அல்லது எமது நாட்டில் வளம் இருந்தும் நாம்
உளுந்துக்கும் அயல் நாடுகளிடம் தொடர்ந்தும் கையேந்தும் நிலைக்கு செல்லும்
அபாயத்தை தடுக்க முடியாது என்பதே உண்மை.