கொழும்பு கோட்டை கிரிஷ் (Krrish) திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் சட்டவிரோதமாக பெறப்பட்டது என்பதை இந்திய நிதி புலனாய்வுத் துறைகள் வெளிப்படுத்தியுள்ளன.
அதன்படி, கிரிஷ் ரியல் டெக் நிறுவனம் மற்றும் அதன் விளம்பரதாரர் அமித் கட்டியால் உட்பட பலருக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நிர்வாகத்தின் போது தொடங்கப்பட்ட கொழும்பு கோட்டை கிரிஷ் திட்டம், பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் சர்ச்சைகள் எழுந்தன.
நாமலுக்கு எதிராக வழக்கு
இந்தத் திட்டம் நடைபெற்று வரும் கிரிஷ் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தைகுத்தகைக்கு எடுத்ததில் ரூ. 70 மில்லியன் நிதி முறைகேடு நடந்ததாகக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்ற வழக்கும் உள்ளது.
இவ்வாறனதொரு பின்னணியில், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதி இந்தத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக இந்திய நிதிப் புலனாய்வுத் துறை வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்த கிரிஷ் ரியல் டெக் நிறுவனம் மற்றும் அதன் விளம்பரதாரர் அமித் கட்டியால் உட்பட பலருக்கு எதிராக விசாரணைகள் நடைப்பெற்று வருகிறதாக கூறப்படுகிறது.
மோசடி பணம்
இந்தியாவின் புது டில்லியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்காக முதலீட்டாளர்களிடமிருந்து பணம் பெற்ற போதிலும், அமித் கட்டியால் 13 ஆண்டுகளாக வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற முறைப்பாடுகள் மீதான விசாரணையின் போது இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, அமித் கட்டியால், அவரது நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் கிரிஷ் ரியல் டெக் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் ஏராளமான முதலீட்டாளர்களிடமிருந்து மோசடியாக பணத்தைப் பெற்று, பல்வேறு நாடுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை மாற்றியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கப்பட்ட 224.08 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள அசையா மற்றும் அசையா சொத்துக்களில், கொழும்பில் 4 ஏக்கர் நிலமும், பாதி கட்டி முடிக்கப்பட்ட சொகுசு ஹோட்டலும் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தவறான தகவல்களை முன்வைத்து அவர்கள் இந்தப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.