நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தொடர்ந்தும்
சிக்கல்களில் இருந்து மீள முடியாதுள்ளது.
ஏற்கனவே கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு அப்பால், கட்சியின் ஆலோசகர்
ஒருவர், பணக்கார தொழிலதிபர்களுக்கு தேசிய பட்டியலில் இடம் அளிப்பதாக
வாக்குறுதி அளித்து மில்லியன் கணக்கான ரூபாய்களை சம்பாதித்ததாக வலுவான
குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று கூறுகிறது.
பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார அரிசி வியாபாரி, தமக்கு ஒரு
இடத்தைப் பெறுவதற்கு மிகப்பெரிய அளவில் 500 மில்லியன் கொடுத்ததாக கட்சியின்
தலைமையிடம் முறையிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு அழுத்தம்
அவருக்கான தேசியப்பட்டியல் இடம் கிடைக்காதபோதே இந்த விடயம் கசிந்துள்ளது.
நாடாளுமன்ற ஆசனத்தைப் பெறுவதற்கு பணம் கொடுத்த முறைப்பாட்டை வழங்கிய
மற்றொருவர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபராவார்
இருப்பினும், அவர் பணம் செலுத்தப்பட்ட தொகையைவிட பெரிய தொகை என்று கூறினாரே தவிர,
அவர் அது எவ்வளவு தொகை என்று குறிப்பிடவில்லை.
இந்தநிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கட்சி அத்தகைய
நிதியைப் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு கட்சியின்
தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) அழுத்தம் கொடுக்கப்படுவதாக கொழும்பின் ஊடகம்
குறிப்பிட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள்
ஏற்கனவே கட்சியில் தலைவர் பதவி குறித்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் பிரேமதாசவைப் பொறுத்தவரை, மோசமான தருணத்தில் இந்த பிரச்சினையும் சேர்ந்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் தற்போது தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு
செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் கட்சியின் செயற்குழுவில் சஜித் பிரேமதாச
கடும் ஆட்சேபனைகளை எதிர்கொண்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த உறுப்பினர்களுடன்
கலந்தாலோசிக்காமல் அவர் எடுக்கின்ற முடிவுகள், அவரது தந்தை ரணசிங்க பிரேமதாச,
தனது ஜனாதிபதி காலத்தில் நடத்திய தனி மனிதர் நிகழ்ச்சியை போன்றது என்றும்
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.