ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம்
கிராம மக்களை மீள்குடியேற்றுவதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை
எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்
கூட்டத்தில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னிலையில் ரவிகரனால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கரைதுறைப்பற்று பிரதேசத்தில் தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் ஆகிய
கிராமங்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்படவில்லை.
தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது
சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்குத் தயாராக இருக்கின்றனர்.
மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை
குறித்த
கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளுமாறு என்னிடமும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு அப்பகுதிகளிலிருந்த மக்கள் இடப்பெயர்வைச்
சந்தித்திருந்தனர். இருப்பினும் அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான எந்த
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தநிலையில், இவ்வாறாகத் தம்மை தமது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேறவிடாமல்
தடுத்துவைத்துக்கொண்டு, தமது பூர்வீக கிராமங்களில் வேறு குடியேற்றங்களை
மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதா என்ற அச்சத்துடன்
அப்பகுதிகளுக்குரிய மக்கள் காணப்படுகின்றனர்.
உடனடியாக நடவடிக்கை
எனவே புதிய அரசாங்கமானது தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமமக்களின்
மீள்குடியேற்ற விடயத்தில் கூடிகவனஞ்செலுத்தவேண்டும். அவர்களை
மீள்குடியேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’’ என்றார்.