அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 65 ரூபா வரியினால் அரசாங்கத்திற்கு 10.9 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2413/37ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட அரிசி இறக்குமதி அனுமதிப்பத்திர கட்டுப்பட்டை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான ஒழுங்குவிதிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் நேற்று அனுமதி வழங்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில், அரிசி இறக்குமதி வரியால் ஈட்டப்பட்ட வருவாய் குறித்து அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரிசித் தட்டுப்பாடு
இதன்போது, அரிசி இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு 2025ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதாகவும், இந்தக் காலகட்டத்தில் அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 65 ரூபா வரியினால் அரசாங்கத்திற்கு 10.9 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதேவேளை, அரிசித் தட்டுப்பாடு குறித்து குழுவில் ஆராயப்பட்டுள்ளதுடன் அரிசி உற்பத்தி மற்றும் போதிய தொகையைப் பேணுவது தொடர்பில் துல்லியமான தகவல்களை விவசாய அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட ஏனைய தரப்புக்கள் பேணுமாறும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் 2384/35 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மீளவும் ஆராயப்பட்டு குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.
அத்துடன், குறித்த சட்டத்தின் கீழ் தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்காக இந்த ஒழுங்குவிதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.