அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டையும் அரசின்
நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதோடு அரசியல் கைதிகளின் விடுதலையை
துரிதமாக்குமாறும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (28.01.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலிற்கு பின்னர் இந்திய மற்றும் சீன பிரயாணங்களைத் தொடர்ந்து
நாடு உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கையில் யாழ். மாவட்ட
செயலகத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு
ஜனாதிபதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கிற்கு வருகை
தரவுள்ளார்.
இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பலப்படுத்தும் அரசியல் பயணமாக
அமையாது. தமிழர்கள் எதிர்நோக்கம் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார
பிரச்சினைகளின் தீர்வுக்கு அடித்தளமிடும் விஜயமாக இருக்க வேண்டுமென
வலியுறுத்துகின்றோம்.
விசேடமாக தமிழர் தாயகத்தில் மக்கள் முன்நின்று ஜனாதிபதி “அரசியல் கைதிகள்
விடுதலை செய்யப்படுவார்கள்” என நம்பிக்கை அளித்ததை நாம் மறக்கவில்லை.
எதிர்க்கட்சியின் நிலைப்பாடு
ஆனால்
அதனை மறுத்தலிக்கும் வகையில் அண்மையில் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவருமில்லை என தெரிவித்திருக்கையில், இந்த விடயத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டையும் அரசின் நிலைப்பாட்டையும்
வெளிப்படுத்த வேண்டும் என்பதோடு அரசியல் கைதிகளின் விடுதலையை
துரிதமாக்குமாறும் அதற்கான நாள் குறிக்குமாறும் கோரிக்கை விடுப்பதோடு அதற்கான
துரித நடவடிக்கையை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியும் அரசியல் கைதிகளின்
விடுதலைக்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை எனக் கூறியிருக்கும்
சந்தர்ப்பத்தில் அதனை உரிய வகையில் பயன்படுத்தி அரசியல் கைதிகளை நிபந்தனை
இன்றி விடுதலை செய்யுமாறு கேட்கின்றோம்.
மேலும் முன்னாள் போராளிகள் மற்றும் நீண்ட நாள் சிறை கொடுமையின் பின்னர்
நீதிமன்றத்தினால் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள்
மீளவும் விசாரணை என அச்சுறுத்துவதும், கைது செய்யப்படுவதும் தடுத்து
வைப்பதையும் நிறுத்துவதோடு அவ்வாறு விசாரணை அழைத்து செல்லப்பட்டு தடுத்து
வைக்கப்பட்டுள்ளோரை விடுதலை செய்யுமாறும் கேட்கின்றோம்.
அது மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியும் நீங்களும் தெற்கின் மேடைகளில் அடிக்கடி
பாராயணம் செய்யும் இலஞ்சம், ஊழல், அரசியல்வாதிகளின் மோசடி என்பவற்றை மீண்டும்
வடக்கு அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசி மக்களை பொது மயக்க நிலைக்கு தள்ளாது
வடக்கு கிழக்கு தமிழர்களின் தேசியத்திற்கு தடையாக இருக்கும் சிங்கள பௌத்த
பேரினவாதத்தின் அரச பயங்கரவாத செயற்பாடுகளை கிளீன் செய்வதற்கான உத்தரவாதத்தை
வெளிப்படுத்துவதும் வடக்கின் அபிவிருத்திக்கு துணையாக அமையும் எனவும்
கூறுகின்றோம்.
தாயக அரசியல்
அபிவிருத்தி என்பது பாதைகள் அமைத்தல் கட்டிடங்களை நிர்மாணித்தல் புதிய வேலை
வாய்ப்புகளை உருவாக்குதல் பல புதிய சமூக நலத் திட்டங்களை முன்வைப்பதாக கூறுவது
மட்டுமல்ல உண்மையான அபிவிருத்தி மக்கள் மனதில் அரசியல் நம்பிக்கை பலப்படுத்தி
தமிழர்களின் தேசியத்தின் தூண்களை காப்பதிலும் தங்கி இருக்கின்றது என்பதே எமது
நம்பிக்கை.

ஆனால் இந்த தூண்களை திட்டமிட்டு வகையில் பெரும் தேசியவாதம் அழித்துக் கொண்டு
வெளிநாட்டு முதலீடுகள் மூலம் எமது தாயகத்தில் துறைமுகங்களின், விமான
நிலையங்களின் அபிவிருத்தி என அயலக அரசியல் சக்திகளின் அதிகாரத்திற்கு
இடமளித்து எமது அரசியல் அபிலாசைகளை மண்தோண்டி புதைப்பதை ஏற்றுக் கொள்ளவும்
முடியாது அபிவிருத்தி என மகிழவும் இயலாது.
முன்னாள் ஜனாதிபதிகளை போன்று தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை
முன்னணியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமாகிய அநுர குமார திசாநாயக்கவும்
இந்திய மற்றும் சீன விஜயங்களில் பல்வேறு உடன்படிக்கைகளை செய்ததற்குப் பின்னால்
அரசியலே உள்ளது எவரும் அறிவர்.
தமிழர் தாயகத்திலும் அபிவிருத்தி என தாயக அரசியலை அழிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் தொடர்ந்து அதுவே
நடக்கிறது. இவ்வாறு அழிப்பதற்கு இடம் கொடுப்பது முழு நாட்டின் அரசியலையும்
இறைமையையும் அழித்துவிடும் என்பதையும் இச்சந்தர்பத்தில் நினைவுறுத்த
விரும்புகிறோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

